ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 27 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு

technobuffalo--623--rettingers-riffs-android-vs-apple
இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது.
எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள்
நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது.
என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது. இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன. 2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை. அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை.
இருப்பினும் சில தொழில் நுட்பங்கள் மற்றும் தரப்படும் வசதிகளில் ஐபோன் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. கீழே அவை சுட்டிக் காட்டப்படுகின்றன
.
1. தோற்றப் பொலிவு: ஐபோனின் வடிவமைப்பு எப்போதும் தனித் தன்மையுடன், மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் சிறப்பு கொண்டதாகவே உள்ளது. ஐபோன் 6ல் தரப்படும் ரெடினா டிஸ்பிளே, சூரிய வெளிச்சத்தில் டெக்ஸ்ட் உட்பட திரைக் காட்சியைத் தெளிவாகக் காட்டும். இது சாம்சங் போன்களில் இல்லை. காலக்ஸி எஸ் 3 போனை, நிழலில் வைத்துத்தான், திரையில் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.
2. நெட்வொர்க் இணைப்பு: முந்தைய மாடல்களைக் காட்டிலும், ஐபோன் 6 மாடல்களில், நெட்வொர்க் இணைப்பு வேகமாகவும், பல்வேறு வகை நெட்வொர்க் நிலைகளைத் தொடர்பு கொள்ள இயன்றதாகவும் உள்ளது.
இதற்கு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பம் (LTE (long-term evolution, a wireless networking standard)) உதவுகிறது. இதன் மூலம் 150 Mpbs என்ற வேகத்தை எட்ட முடியும்.
3. என்.எப்.சி. வாலட்: ஆண்ட்ராய்ட் இயக்கும் கூகுள் வாலட் சிஸ்டத்தில் உள்ள குறைகள் எதுவுமின்றி, ஆப்பிள் வாலட் அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆப்பிள் தர இருக்கும் வாட்ச் செயல்பாட்டினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
4. பேட்டரியின் பலமுனை திறன்: ஐபோன் 6ல் தரப்படும் பேட்டரியில் தொடர்ந்து 50 மணி நேரம் ஆடியோ இசைக்கலாம்; 11 மணி நேரம் விடியோ பார்க்கலாம்; 11 மணி நேரம் வை பி அல்லது எல்.டி.இ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தலாம். 10 மணி நேரம் 3ஜி பிரவுசிங், 14 மணி நேரம் குரல் வழி தொடர்பு மேற்கொள்ளலாம். 16 நாட்கள் இதன் மின் சக்தி தங்கும் சக்தி கொண்டதாக உள்ளது. இதுவே ஐபோன் 6 ப்ளஸ் மாடலில், மேலே தரப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கூடுதலான காலத்திற்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சாம்சங் புதிய பேட்டரிகளைத் தர வேண்டியதிருக்கும்.
5. ஒருங்கிணைப்பு: Integration என்று சொல்லப்படும் ஒருங்கிணைப்பு, ஆப்பிள் நிறுவன சாதனங்களில் கிடைக்கும் ஒரு நல்ல வசதியாகும். மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை தெளிவாக இணைத்துச் செயல்படுத்தலாம். ஆப்பிள் தரும் Handoff போன்ற வசதிகள், இதனை இன்னும் சிறப்பானதாக மாற்றி உள்ளன.
மூன்று வகை சாதனங்களிடையே இவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தலாம், செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் செயல்படுத்துகிறது.
Gmail, Chrome, Google Calendar, and Google+ ஆகிய அனைத்தும் இணைவாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்த வசதியைத் தருவதை ஆப்பிள் நிறுவனம் மக்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி வருகிறது. கூகுள் இவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பின் தங்கியே உள்ளது.
6. தன் ஆளுமை: ஆப்பிள் தான் தரும் வசதிகள் அனைத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இணைவான ஒரு நண்பனாகச் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்கள், வாடிக்கையாளர்களின் இசைவான வசதியைத் தர தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையே நம்பி உள்ளது.
இந்த வகையில், user-friendly மூல நிறுவனமாக ஆப்பிள் பெயர் எடுத்துள்ளது. வரும் நாட்களில், நிச்சயம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கு முறையில் பல மேம்படுத்தல்களை எதிர்பார்க்கலாம். ஆப்பிள் தந்துள்ள புதிய சவால்களை கூகுள் நிச்சயம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி- தினமலர்

Popular Posts

Facebook

Blog Archive