மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 18 நவம்பர், 2014

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!

* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

-எம். மரிய பெல்சின்

Thanks To
Vikatan EMagazine

Popular Posts

Facebook

Blog Archive