1டிஎம்சி(TMC) தண்ணீர் என்றால் என்ன? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil 1டிஎம்சி(TMC) தண்ணீர் என்றால் என்ன? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 21 ஜூலை, 2018

1டிஎம்சி(TMC) தண்ணீர் என்றால் என்ன?

#1டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன?

ஒரு நிமிடம் இதை படித்து பாருங்கள்.

செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்..

காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம்.

தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது

கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம்.

மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது.. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை.. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும்..

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ்.. இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும்.

காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும்.

கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது..

காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15.67 டிஎம்சி.. ஹேமாவதி 35.76 டிஎம்சி ஹேரங்கி அணை 8.07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05. என மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம்.

தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்..

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எந்த அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்து அணைகளின் கொள்ளளவை பார்ப்போம்.. ‘’ஒரே நாளில் ஐந்தடி உயர்ந்தது.. பத்து அடி உயர்ந்தது.. 80 அடியை தாண்டியது… 100 அடியை தொடப்போகிறது.. என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூசை அடிப்பார்கள். ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு பிரயோஜனமும் கிடையாது..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி. மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி. ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி.. அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்.. மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க, இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு அர்த்தம் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி.. 75 அடியை தொட்டால் 37 டிஎம்சி.. 100 அடி..100 அடி என்று சொல்வார்களே அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்.. ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும். அதாவது மேட்டூர் அணை 100 லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணை அளவுக்கு தண்ணீர் தேவை.

அப்படியென்றால் முல்லைப்பெரியாறு வைகை, கிருஷ்ணகிரி போன்ற அணைகளில் இத்தனை அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது..உயர்ந்துகொண்டே இருக்கிறது என்று அடிக்கணக்கை மட்டும் வைத்து தகவலைச்சொன்னால் அங்கே பரபரப்பை தவிர என்ன இருக்கப்போகிறது. என்னதான் புரிந்துவிடப்போகிறது?

அணை தொடர்பான செய்தி என்றால் பாமரர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாக இருக்கவேண்டும். எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்பதோடு, அணையின் கொள்ளளவில் எவ்வளவு நீர்,  எத்தனை சதவீதம் நீர் இருக்கிறது என்று சொன்னால் சுபலத்தில் புரிந்துவிடும்..

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தொட்டுவிட்டது. நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57சதவீதம்.. அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120 அடியில் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு.. 100 அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை..

Popular Posts

Facebook

Blog Archive