இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை.

#கொஞ்சம் இதை முழுவதுமாக படியுங்கள்

இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்

``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார். 

கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்
கருப்பசாமி
தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா?. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.

கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.

எங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..

1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.
2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.
3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.
4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.
5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.
6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.
7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.
8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.

இந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான குடிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.
அதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று முடித்தார்.

Popular Posts

Facebook

Blog Archive