ரௌட்டர் (Router) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ரௌட்டர் (Router) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

ரௌட்டர் (Router) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை.
நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.

பொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம்.

ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும் ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whatismyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும். இவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.

ரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது. ஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.

ஒரு ரௌட்டர் ஹார்ட்வேர் பயர்வால் போலவும் செயல்படுகிறது. இதன் மூலம் வெளியிலிருந்து நம் கம்ப்யூட்டருக்கு வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களான மால்வேர் மற்றும் வைரஸ் ஆகியவற்றிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரண் வழங்கப்படுகிறது. சில ரௌட்டர்களில், இது போன்ற பயர்வால் பாதுகாப்பு வழங்கும் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே வழங்கப்படுகின்றன. சிலவற்றில் மேலும் பல பாதுகாப்பு வசதிகளும் தரப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க, பெற்றோர்கள் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு புரோகிராம்களும் கிடைக்கின்றன.

மோடம் செயல்பாட்டினை அனைத்து ரௌட்டர்களும் கொண்டிருக்காது. ஒரு ரௌட்டர் தானாக இணைய இணைப்பினைத் தராது. ஒரு ரௌட்டர் அது ரௌட்டராகவும் மோடமாகவும் செயல்படும் என அதனைத் தயாரித்த நிறுவனம் அறிவிக்காதவரை, ரௌட்டரை மோடம் ஒன்றுடன் இணைத்தே நாம் இணைய இணைப்பினைப் பெற முடியும். இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு மோடம் சாதனம் ஒன்றினை வழங்குகின்றன. எனவே, அதனுடன் இணைக்கலாம். ஆனால், மோடமாகவும் ரௌட்டராகவும் இயங்கும் ரௌட்டர் இருப்பின், அதில் நேரடியாக, இணைய சேவை நிறுவனத்தின் தொடர்பை இணைத்து இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலர், இணைய சேவை நிறுவனங்களிடம் மோடத்தினை வாடகைக்குப் பெறலாமா அல்லது விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாமா என்று கேட்கின்றனர். நல்ல மோடம் அல்லது ரௌட்டர்கள் பழுதடைந்து இயங்காமல் இருப்பதில்லை. எனவே ஒன்றினை, குறிப்பாக ரௌட்டர் மற்றும் மோடம் இணைந்த சாதனம் ஒன்றை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது. இணைய இணைப்பு என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், ஏன் வீணாக வாடகைக்கு மோடத்தினைப் பெற வேண்டும். அப்படி ஒன்றை வாங்கும் முன், அந்த மோடம், நீங்கள் இணைப்பு பெறும் இணைய சேவை நிறுவனத்தின் சேவையுடன் இணைந்து செயல்படுமா என்பதனை அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Popular Posts

Facebook

Blog Archive