தேர்தல் ஆணையம் யார் கையில் ? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil தேர்தல் ஆணையம் யார் கையில் ? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2019

தேர்தல் ஆணையம் யார் கையில் ?

*தேர்தல் ஆணையம் யார் கையில்.* ?
______________________

 *தமாங், சசிகலா..* 
_________________

6 *ஆண்டு தேர்தல் தடை* *அம்போ... சசிகலா முதல்வர்* *ஆவார் எப்படி? பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!*

இந்தக் கட்டுரையை லில்லி தாமஸிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

நான்காம் வகுப்பு படிக்கும் போதே தன் பெயருக்கு முன்னால், `வழக்கறிஞர் லில்லி தாமஸ்' எனப் போட்டுக்கொண்டவர் அவர். பின்னாளில் அதைச் சாதித்தும் காட்டியவர். கோட்டயத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். அரசியலில் குற்றப் பின்னணியினரை ஒழிக்க 86-ம் வயதிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் லில்லி தாமஸ்.


`அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர முடியும்’ என்றது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4). இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தித்தான் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் கிரிமினல் குற்றவாளிகள் `மக்கள் பிரதிநிதி'களாக வலம் வந்தார்கள். `இந்தச் சட்டப் பிரிவு 8 (4) அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இந்தப் பிரிவு செல்லாது' என அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கு போட்டார் லில்லி தாமஸ். அந்த வழக்கில்தான், `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக் கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும்’ என அரசியல்வாதிகளின் தலையில் 2013-ம் ஆண்டு இடியை இறக்கியது சுப்ரீம் கோர்ட்.

இந்தத் தீர்ப்பால் எம்.பி பதவி இழந்த முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத். அவரைத் தொடர்ந்து லாலு, ஜெகதீஷ் சர்மா, நம்ம ஊர் செல்வகணபதி, ஜெயலலிதா, பாலகிருஷ்ணரெட்டி என அடுத்தடுத்து  அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோயின.

பதவி இழந்த லாலு, ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ண ரெட்டி ...
இப்படி சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. `தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.

` *ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிற கூர் தீட்டப்பட்ட கத்தியை இன்றைக்கு சிக்கிம் முதல்வருக்காக* *மழுங்கடித்துவிட்டது தேர்தல் ஆணையம்.* 

பவன் குமார் சாம்லிங்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகக் கோலோச்சிக்கொண்டிருந்த `சிக்கிம் ஜனநாயக முன்னணி' தலைவர் பவன் குமார் சாம்லிங்கை வீழ்த்தி, `சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா'வின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார். முதல்வரானாரே தவிர, தமாங் எம்.எல்.ஏ ஆகவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனால்தான், அவரால் முதல்வராக நீடிக்கமுடியும்.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல். 
முன்பு தமாங் அமைச்சராக இருந்த காலத்தில், அதாவது 1996-97-ம் ஆண்டு கறவை மாடுகள் வழங்கும் திட்ட ஊழலில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் தமாங். தண்டனை அனுபவித்து, 2018 ஆகஸ்ட் 10-ம் தேதிதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. பிறகு எப்படி முதல்வரானார் என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டியதில்லை.

சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' 15 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. 

`` *ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் கட்சியைக் கைப்பற்று"* 

என்கிற சூத்திரத்தை சிக்கிமிலும் செய்தது பி.ஜே.பி. தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி'யின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் ஐக்கியமானார்கள். இதனால் பவன்குமார் சாம்லிங்கின் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, தமாங்குக்குத் தாராளமாகக் கிடைத்தது. 

விளைவு தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளிக்கிறார் தமாங். `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்க முடியாது. 

ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என மனுவில் குறிப்பிடுகிறார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கிறது. இதன் மூலம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் நின்று, தமாங் வெற்றி பெறுகிறார் . *முதல்வராகத் தொடர்கிறார்* 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவுக்கு இது சாபக்கேடு. தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை அதிலிருந்து விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். சிக்கிம் இடைத்தேர்தலுக்காக தமாங்கும் மோடியும் கூட்டணி போட்டனர். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலம் கைம்மாறு நடத்தப்பட்டிருக்கிறது.

 *அரசியலில் `கிரிமினல்' கலப்பதை எதிர்ப்பதில் தான்தான் `முன்னோடி' எனக் காட்டிக் கொண்ட பி.ஜே.பி-யின்* *முகத்திரை தமாங் விவகாரத்தில் கிழிந்து* *தொங்குகிறது* .
 *தமாங்குக்கு பதவிப்* *பிரமாணம் செய்து* *வைக்கிறார் கவர்னர்* ..

சிக்கிம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் அவரது கட்சி வெல்கிறது. அவருடைய கட்சி எம்.எல்.ஏ-களால் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் தமாங். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ள போதுதான், தேர்தல் கமிஷன் தமாங்குக்கு சலுகை காட்டுகிறது. 

இந்த இடத்தில் இந்தியாவே திரும்பிப் பார்த்த ஜெயலலிதா வழக்கை கவனத்திலே எடுத்துக்கொள்ளவில்லை சிக்கிம் கவர்னரும், தேர்தல் ஆணையமும்.

டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க. வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பாய்ந்தது.

தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு.     எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?' எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை 2001 செப்டம்பர் 21-ம் தேதி பறித்து உத்தரவிட்டது நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச். இதனால், ஜெயலலிதா அமைச்சரவையே கவிழ்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.

` *ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது* *செல்லாது' என 18 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உரக்கச்* *சொன்ன விஷயம், சிக்கிம் கவர்னருக்கும் தேர்தல்* *கமிஷனுக்கும் கொஞ்சம்கூட உரைக்கவில்லை* *என்றால் இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின்* *காவலர்களா... அல்லது குற்றவாளிகளுக்குத்* *துணை போகும் ஏவலர்களா என்று கேள்வி எழுப்புகிறான்* *இந்த தேசத்தின் வாக்காளன்* .

சிக்கிம் முதல்வராக தமாங் பதவியேற்ற தேதி 2019 மே 27. அதாவது, தமாங் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட காலம் அது. சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக்கூடத் தகுதியில்லாத தமாங்கை, ஆளுநர், முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லுமா? அவர் முதலமைச்சராகத் தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது அரசியல் தெரியாத பத்தாம் வகுப்பு மாணவனுக்குக்கூட தெரிந்த உண்மை, அரசியல் அறிந்த சட்டம் தெரிந்த சிக்கிம் ஆளுநருக்குத் தெரியாதா... ஆள்வோருக்கு புரியாதா... மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆளுநர் மாளிகை என அனைத்து அதிகார அமைப்புகளும் வாய் மூடிவிட்டன.

 *`பி.ஜே.பி-யின் கண்ணசைவுக்குத் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது'* என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தானே இருக்கிறது தமாங் விவகாரம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததே தவறு. கவர்னர் மூலம் அந்த தவற்றையும் செய்துவிட்டு, அந்த முதல்வர், தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தடைக்காலத்தைக் குறைத்துவிட்டு அந்த முதல்வரோடு கூட்டணி அமைத்து இடைத் தேர்தலையும் சந்திக்கிறது பி.ஜே.பி.

 *லில்லி தாமஸ் மேட்டருக்கு வருவோம்.*

 அவர் போட்ட வழக்கால்தான் `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக்கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் உடனடியாக ரத்தாகும்’ என 2013 ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு எழுதியது உச்சநீதிமன்றம். இதனால் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் உருவானது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உச்சநீதிமன்றம் இப்படி கடிவாளம் போட்டதும் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்தன. 2013 ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவை, பயனற்றதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு. அதற்குக் காரணம் அன்றைக்கு லோக்சபா எம்.பி.,க்கள், 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. மாநில எம்.எல்.ஏ.,க்கள் 4,032 பேரில், 1,258 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

மக்கள் பிரதிநிதி'களைப் பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தார்கள். அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை 2013 ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்தது மன்மோகன் சிங் அரசு. அதில், `இந்தத் தீர்ப்பு, அரசியல் ரீதியாகப் பழிவாங்கவே பயன்படும். அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்போதே பதவியைப் பறித்துவிட்டால், அப்பீல் மனுவில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அவரால் மறுபடியும் பதவியைப் பெற முடியாது. ஒருவர் எப்போது பதவி பறிப்புக்கு ஆளாவார் என்று சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. அதை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற அரசியல் சட்ட விவகாரங்களை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது தவறு. அதிக நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' எனச் சொன்னது.

மறு சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `தண்டனை பெற்ற, எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்கலாம் என, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்தத் தவறும் இல்லை. மிகவும், அலசி ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அது. இந்த விஷயத்தில், மறு பரிசீலனைக்கே இடமில்லை' என 2013 செப்டம்பர் 3-ம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது மன்மோகன் சிங் ஆட்சி. நீதிமன்ற உத்தரவையும் மீறி, குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ-களை காப்பாற்றும் மன்மோகன் சிங் அரசின் அவசரச் சட்டத்துக்கு அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி கடுமையாக எதிர்த்தது. `அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது' எனச் சொல்லி 2013 செப்டம்பர் 27-ம் தேதி அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, வலியுறுத்தினார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த அத்வானி, ``தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது'' எனக் கர்ஜித்தார். அந்தக் கட்சிதான் இன்றைக்கு தமாங் விஷயத்தில் அரசியல் சாசனத்தையே துச்சமெனத் தூக்கி வீசியிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் ஒன்று எழுந்தது. அது ராகுல் காந்தியின் குரல். பி.ஜே.பி தலைவர்கள் எல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்கப் போனபோது திடீரென்று டெல்லி பிரஸ் கிளப்புக்கு விஜயம் செய்தார் ராகுல் காந்தி.

நீண்ட நேரம் பிரஸ் மீட் நடத்தப்போவதில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லிவிட்டு, என் வேலையைப் பார்க்கப்போகிறேன்'' என்று சொன்ன ராகுல் காந்தி, ``கிரிமினல் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. அதைக் கிழித்து குப்பையில் எறியுங்கள்'' என்றார் ஆவசேமாக. காங்கிரஸ் ஆட்சிக்குள்ளேயே `சேம் சைடு கோல்' போட்ட தருணம் அது. அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் அனுப்பினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி ஆக்ரோஷமாகக் கர்ஜித்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் கருத்தை அறிய ஊடகத்தினர் அங்கே குவிந்தனர். ``எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துப் பரிசீலிக்கப்படும்'' என அறிக்கை விட்டார் மன்மோகன். ஆனால், பி.ஜே.பி-யோ இதை `ஒரு அரசியல் நாடகம்' என அன்றைக்கு வர்ணித்தது. ``சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார் அன்றைக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி.

வெங்கையா நாயுடுவோ, ``ராகுல் காந்தி சொல்வது போல முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? பதவியிலிருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார். ``பிரதமரையும் அவரது கேபினட்டையும் 'நான்சென்ஸ்' எனக்கூறுகிறார் ராகுல் காந்தி. தனக்குச் சுயமரியாதை இருக்கிறது என்பதைக் கொஞ்சம்கூட வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார் மன்மோகன் சிங். பிரதமருக்குக் கொஞ்சமாவது சுய மரியாதை இருக்க வேண்டாமா'' எனக் கேள்வி எழுப்பினார் நிதின் கட்கரி

அன்றைக்குக் காட்டிய `ஆக்ரோஷம்' எல்லாம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததும் `வேஷம்' ஆகிவிட்டது.

நரேந்திரமோடி மட்டும் சும்மா இருந்திருப்பாரா... பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக அன்றைக்கு அறிவிக்கப்பட்டிருந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா... 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லியில் நடந்த விகாஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, `` *டெல்லியில் அம்மா ஒரு பக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒரு* *பக்கம் ஆட்சி நடத்துகிறார். ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கிறது.* *காங்கிரஸ் கட்சியே நமது பிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி* *மதிப்பார்... ராகுல் காந்தி நான்சென்ஸ் என்றபோது பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு* *தெரிவிக்கவில்லை.* *நீங்கள் காங்கிரஸின் பட்டத்து இளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா...* *அல்லது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் கீழ் செயல்பட* *விரும்புகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார் மோடி.*

அந்த மோடிதான் இன்றைக்குப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தமாங்குக்கு ஆதரவாக அரசியல் சாசனத்தையே தூக்கி எறிகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லாலு, ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிக்கப்பட்ட போது அன்றைக்கு பி.ஜே.பி வரவேற்றுக் கொண்டாடியது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் தமாங்கைப் போற்றுகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொண்டபோது குஜராத் காந்தி நகர் பிரசாரக்கூட்டத்தில் பேசிய மோடி, `` *அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை* *அளிக்கிறது. அரசியலைக் குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து விடுவிப்பேன்* .

 *பி.ஜே.பி ஆட்சிக்கு* *வந்தால், குற்றம் புரிந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு* *அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்* *மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து* *அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்''* என்றார்.

வென்று ஆட்சியில் அமர்ந்து ஐந்தாண்டுகள் ஓட்டியும் விட்ட மோடி, அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று மீண்டும் பிரதமரானார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். மோடி போட்டது அத்தனை பொய் வேஷம்.

வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. உண்மைதான். அதைத்தான் தேர்தல் ஆணையம் பயன்படுத்தியிருக்கிறது என வாதம் வைக்கப்பட்டாலும் நியாயமான அணுகுமுறையா இது? பி.ஜே.பி கூட்டணிக் கட்சிக்காக தமாங்குக்குத் தரப்பட்ட சலுகையைக் காட்டி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறைக்குப் போய்விட்டு வந்தவர்களும் அரியணையில் அமர்வார்கள்.

 *மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் தரம் இன்னும்* *மேம்படுத்தப்பட வேண்டும்...*

 ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்... குற்றப்பின்னணியினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்... நீண்ட ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம்.

தமாங்கைப் பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமது அரசியலை பி.ஜே.பி ஆடத் தொடங்கலாம். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் நான்கு ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 2021 பிப்ரவரியில்தான் விடுதலை ஆக வேண்டும். ஏற்கெனவே அனுபவித்த சிறை நாள்கள், நன்னடத்தைக் காரணங்களால் 2020 ஜூலையிலேயே சசிகலா வெளியே வரலாம். அதிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம். பி.ஜே.பி. ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது 1995-ம் ஆண்டு. அது போதாது? `

ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. 1995-ம் போடப்பட்ட வழக்குக்குப் பிறகு நிறைவேற்றிய சட்டத்தைக்கொண்டு தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது செல்லாது’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவார் சசிகலா. அதிகார வர்க்கத்தின் ஆசி இருந்தால் முதல்வர் நாற்காலியில்கூட வந்து அமர்வார்.

 *ஜனநாயகத்தின் ஆணிவேர்களைக் காப்பவர்கள் லில்லி தாமஸ்கள்தான்.* *அதைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லி அரியணையில் அமரும் ஆட்சியாளர்கள் அல்ல.*

 *ஆய்வுக்கு ........*

Popular Posts

Facebook

Blog Archive