காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. 

காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் 

வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்...
இப்படிக்கு, 

இயற்கையை நேசிப்பவன்.

Popular Posts

Facebook

Blog Archive